Sunday, September 26, 2010

எந்திரன் முகத்திரை கிழிகிறது


நடிகர்கள் சண்டை காட்சியில் டூப் போடுவது ஒன்றும் புதிதல்ல, தவறும் இல்லை. கோடிக்கணக்கில் பணம் போட்டு தயாரிக்கும் தயாரிப்பாளருக்கும், கடும் உழைப்பை கொடுக்கும் யுனிட்டிற்கும் அது தேவை இல்லாத ரிஸ்க் தான். ரிஸ்கெல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி என்று களம் இறங்கும் நடிகர்களும் உண்டு. ஆனாலும் அதிவேகமான சண்டை காட்சிகள் இந்திய சினிமாவில் இருப்பதில்லை. காரணம் 99.5% சதவித நடிகர்களுக்கு Martial Art எனப்படும் சண்டைக்கலை தெரிந்திருப்பதில்லை. அதனால் தான் நம்ம படங்களில் நடிகர்கள் கம்பியின் உதவியால் பறந்து பறந்து சண்டை போடும்போது காமெடியாக தெரியும். சீனா , ஹாங்காங் திரைப்படங்களில் கம்பிவித்தை பயன்படுத்தினாலும் அவர்களின் சண்டைக்கலை அதன் வேகம் , துல்லியம் இவற்றால் பார்வையாளன் அந்த சண்டைகாட்சியை நம்புகிறான்.அங்கு Martial Art தெரியாத நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். கிழவன் கிழவி கூட அதி அற்புதமாக சண்டை போடுவார்கள்.

ஹாலிவுட்டில் வேறுவிதத்தில் நம்பகத்தன்மையை உருவாக்குவார்கள். ஒன்று, கதாநாயகன் கட்டுமஸ்தான உடம்பும் , உயரமும் கொண்டிருப்பான். இரண்டு, கதைகள் ஹீரோவுக்கு அதித சக்தி கிடைப்பது போல இருக்கும். மூன்று, ஹீரோ பழிவாங்கும் உணர்ச்சியினால் கராத்தே கற்க கடும் முயற்சிகள் எடுத்து இறுதியில் வில்லனுடன் சண்டையிட்டு வெல்வான்.

நம்ம ஊரு கதாநாயகர்கள் தாயின் வயிற்றுக்குள்ளேயே சிலம்பம் , கராத்தே எல்லாம் கற்று பின்னர் பிறப்பதால் பன்ச் டயலாக் பேசி நூறு பேருடனும் மோதி எளிதாக வெல்வார்கள். சண்டை ஆரம்பிக்கும் போது அவர்கள் முகம் க்ளோசப்பில் காட்டி சண்டை முடிந்த பின்பு மீண்டும் க்ளோசப்பில் காட்டி சண்டையை நம்ம ஹீரோ தான் போட்டார் என்று நம்ப வைப்பார்கள். இதில் கூட குறைய உண்டு.

இயக்குனர் ஷங்கர் ஹாலிவுட்டில் பரவலாக பயன்படுத்தும் மாஸ்கிங் முறையை பயன்படுத்தி நடிகர் ரஜினிகாந்த் இல்லாமலேயே முழுசண்டை காட்சியையும் எடுத்திருக்கிறார். அலெக்ஸ் மார்டின் என்ற அதி அற்புதமான சண்டை கலைஞன் ரஜினியின் ரப்பர் முகத்தை அணிந்து பிரமாதமாக சண்டை போட்டிருக்கிறார். அது youtube இல் வெளியாகி இருக்கிறது. நிச்சயம் இது பிற நடிகர்களால் பின்பற்ற படும் என்பதில் சந்தேகம் இல்லை. விஜய் அஜித் விஷால் போன்ற நடிகர்கள் இனிமேல் அலெக்ஸ்சின் கால்சீட்டிற்காக தவம் கிடக்கலாம் ஆச்சர்யம் இல்லை.

இது தான் சினிமா என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும் . திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

0 comments:

Post a Comment