
எந்திரன் பட வெளியீட்டையொட்டி, கன்னியாகுமரியிருந்து வியாழக்கிழமை யாத்திரையைத் தொடங்கினர் ரஜினி ரசிகர்கள்.
இந்த யாத்திரையின் அடுத்த கட்டமாக சென்னை தாம்பரம் சென்று அங்கிருந்து திருப்பூரில் பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க, சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ள படம் எந்திரன். இதில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் ரஜினி ஜோடியாக நடித்துள்ளார்.
எந்திரன் படம் வரும் 1-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் உற்சாகமாக உள்ளனர். கோயில்களில் சிறப்புப் பிரார்த்தனை, ஏழைகளுக்கு இலவச உதவிகள் என விதவிதமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட மக்கள் பொதுநல இயக்கம் மற்றும் தமிழ்நாடு ரஜினி பொது தொழிலாளர் சங்கம் இணைந்து தமிழகம் முழுவதும் எந்திரன் படத்தின் வாகன பிரசார யாத்திரையை மேற்கொள்ள திட்டமிட்டனர். அதன்படி, வியாழக்கிழமை காலை 11 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து பிரச்சார யாத்திரை தொடங்கியது.
காந்தி மண்டபம் அருகே இப் பயணத்தை ரஜினி மன்ற மக்கள் பொதுநல இயக்க தலைவர் முருகேஷ் தொடங்கி வைத்தார். ஒரு வாகனத்தில் கலை குழுவினர் சென்றனர். மற்றொரு திறந்த வாகனத்தில் ரஜினி மற்றும் ரோபோ வேடம் அணிந்த மூன்று பேர், ஆட்டம் ஆடி பாட்டு பாடியபடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
பிரசார பயணத்தில் மொத்தம் 5 வாகனங்கள் சென்றன. இவர்கள் நாகர்கோவில், திருச்செந்தூர், திருநெல்வேலி, ராஜபாளையம், திருமங்கலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், திண்டிவனம், தாம்பரம், திருவண்ணாமலை, ஈரோடு வழியாக அக்டோபர் 2-ம் தேதி திருப்பூரை சென்றடைகின்றனர்.
பிரசார பயண குழுவினருக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment