Wednesday, September 1, 2010

Ficus Movies Fetched Enthiran Usa Rights (எந்திரன்... அமெரிக்க விநியோக உரிமையைப் பெற்ற 'FICUS' மூவீஸ்!)


சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'எந்திரன் - தி ரோபோ' படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளின் அமெரிக்க விநியோக உரிமையை வாங்கியுள்ளது 'பிகஸ் மூவீஸ்' (FICUS Movies) நிறுவனம்.

தெலுங்குப் படங்களை வெளிநாடுகளில் விநியோகிப்பதில் முன்னணியில் உள்ள நிறுவனம் இது. சமீபத்தில் தெலுங்கில் வெளியான அனைத்துப் படங்களையுமே இந்த நிறுவனம்தான் வெளிநாடுகளில் விநியோகித்துள்ளது. மிகப் பெரிய விலைக்கு இந்த உரிமையை சன் பிக்சர்ஸ் விற்றுள்ளது.

இதுகுறித்து பிகஸ் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எந்திரன் தமிழ்ப் படம் மற்றும் அதன் தெலுங்கு பதிப்பான ரோபோ ஆகியவற்றின் அமெரிக்க உரிமையை பிகஸ் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பெருமைக்குரிய இந்தப் படத்தை விநியோகிக்கும் வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய சன் நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள விஞ்ஞானப் படம் எந்திரன் - தி ரோபோ. தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் முதல் விஞ்ஞானப் படம். உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை இந்தப் படத்தில் ஒருங்கிணைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர். மாட்ரிக்ஸ், தி போர்பிட்டன் கிங்டம் போன்ற படங்களின் ஸ்டன்ட் இயக்குநர் யான் வூ பிங்தான் எந்திரன் சண்டைப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர். அவருடன் பீட்டர் ஹெயினும் இணைந்துள்ளார்.

ஏலியன்ஸ், டெர்மினேட்டர் 2, ஜூராஸ்ஸிக் பார்க் என ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படங்கள் மூலம் பிரமிக்க வைத்த ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோ எந்திரனுக்கு அனிமேட்ரானிக்ஸ் பணிகளைச் செய்துள்ளது.

ரத்னவேலுவின் உயர்தர ஒளிப்பதிவு, ஆண்டனியின் எடிட்டிங் எல்லாமே சிறப்பான முறையில் இணைந்த படம் இது. இந்தப் படத்தின் ஒரு பாடலுக்கு ராஜூ சுந்தரமும் க்ளாடியா ப்ரக்மானும் இணைந்து நடனம் அமைத்துள்ளனர்.

படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பணிகளை ஹாலிவுட்டின் லைட் அண்ட் மேஜிக் நிறுவனம் செய்துள்ளது.அவதார், ஸ்டார் வார்ஸ், டைடானிக் போன்ற மெகா ஹிட் படங்களுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்தவர்கள் இந்த நிறுவனத்தினர்தான். படத்தின் மொத்த பட்ஜெட்டில் 40 சதவீதம் ஸ்பெஷல் எஃபெக்டுக்காகவே செலவிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வெளியாகும் முதல் உலக சினிமா ரஜினியின் எந்திரன்.

இந்த சிறப்பான படத்தை வெளியிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த புல்லாராவ் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்...," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment