Sunday, August 22, 2010

Kalaignar Nagaram Samathuvapuram Karunanidhi Rajnikanth (பொதுநலத்திற்காக உழைக்கும் கருணாநிதிக்கு ஓய்வே தேவையில்லை-ரஜினிகாந்த்)


முதல்வர் கருணாநிதி [^] பொதுநலம், பொதுநலம் என்றே பாடுபட்டு வருகிறார். அதனால் தான் அவருக்கு களைப்பே ஏற்படவில்லை. அவருக்கு ஓய்வும் தேவையில்லை என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த் [^].

கலைஞர் நகரம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசியதாவது:

மத்திய அமைச்சர் தாசரி நாராயணராவ் பேசும் போது, இங்கே குழுமியிருந்தவர்கள் கைதட்டியது பற்றி நடிகர் ஜிதேந்திரா என்னிடம் கேட்டார்.

அதற்கு நான் சொன்னேன், அவர்களுக்கு தெலுங்கு [^] புரியும், ஆங்கிலம் புரியும், மலையாளம் புரியும், தமிழர்களுக்கு தெரியாத பாஷையே கிடையாது. அவர்களுடைய அறிவுக்கு எட்டாத விஷயமில்லை. அவர்களுடைய மனங்களை புரிந்து ஜெயித்து விட்டால், அவர்களிடம் பெயர் வாங்கிவிட்டால் இந்தியாவிலேயே பெயர் வாங்கின மாதிரி என்று சொன்னேன். இது சினிமாவாகட்டும், அரசியலாகட்டும், இது எல்லாத்துறைக்குமே பொருந்தும்.

இது நம்முடைய குடும்ப விழா. இது இவ்வளவு சீக்கிரமே நடைபெறுவது ரொம்பவும் சந்தோஷம். இன்றைக்கு நான் பாம்பே சென்றாலும், ஆந்திரா சென்றாலும், மலேசியா சென்றாலும், எங்கு சென்றாலும் கலைஞரை பற்றித்தான் பேசுவேன்.

இந்த வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக, இவ்வளவு ஆற்றலோடு, இவ்வளவு அறிவோடு செயல்படுகிறாரே அது எப்படி முடிகிறது என்றே தெரியவில்லை என்று நான் வியந்து பேசுவேன்.

ஒரு மகான் எழுதிய புத்தகத்தை படித்தேன். அதில் போட்டிருந்தது, சுயநலத்திற்காக யாராவது வேலை செய்தால் உடனடியாக களைப்படைந்து விடுவார்கள். ஆனால் ஒரு மனிதன் பொதுநலத்திற்காக வேலை செய்தால் களைப்படைய மாட்டான் என்று அந்த புத்தகத்தில் போட்டிருந்தது. அப்படித்தான் நம் முதல்வரும் பொதுநலம், பொதுநலம் என்றே பாடுபட்டு வருகிறார். அதனால் தான் அவருக்கு களைப்பே ஏற்படவில்லை. அவருக்கு ஓய்வும் தேவையில்லை.

இந்த திட்டத்திற்கு பெருமுயற்சி எடுத்த அனைவரையும் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன்.இந்த திட்டம் பற்றி சில விஷயங்களை கேள்விபட்டேன். 99 வருடம் குத்தகை, வாடகை, முதலில் பணம் கட்ட வேண்டும் என்றெல்லாம் சிலபேர் சென்னார்கள். வீடு, நிலம் ஆகியவற்றை வாங்கும் போது அதனை பார்த்து விட்டு வேண்டாம் என்று திரும்ப வரக்கூடாது. அப்படி வேண்டாம் என்று வந்து விட்டால், இவன் வேண்டாம் என்று சொல்கிறானே என்று மூதேவி நினைப்பாளாம். அதற்காக பின்னால் வருத்தப்பட வேண்டி வரும்.

எனவே வீடு, நிலம் வாங்கும் போது எந்த கஷ்டம் இருந்தாலும் அதை ஏற்று கொண்டு வாங்க வேண்டும். எனவே இந்த அருமையான திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும். பெரியார் நினைவு சமத்துவபுரம் போல கலைஞரின் சமத்துவ புரமாக இந்த திரைக்கலைஞர்கள் நகரம் திகழும் என்றார் ரஜினிகாந்த்.

லாரன்ஸ் கொடுத்த முத்தம்-காலில் விழுந்த குஷ்பு:

நிகழ்ச்சியில் நடிகர் ராகவ லாரன்ஸ் பேசுகையில், வீட்டில் தாத்தா சொத்தை எழுதி வைத்தால் பேரக்குழந்தைகள் கட்டி அணைத்து முத்தம் கொடுப்பார்கள்.

அதே போல் நமக்கு வீடு தந்திருக்கும் இந்த பெரியவருக்கு எல்லோரும் முத்தம் கொடுக்க ஆர்வமாக இருக்கும். ஆனால் எல்லோரும் கொடுக்க நேரம் போதாது. அதனால் உங்கள் சார்பில் நான் கொடுக்கிறேன் என்றார். பின்னர் கருணாநிதிக்கு முத்தம் கொடுத்தார்.

அதேபோல நடிகை குஷ்பு முதல்வர் காலில் விழுந்து அனைத்துக் கலைஞர்கள் சார்பிலும் நன்றி கூறினார்.

எப்படி சமாளித்தாரோ? -மம்முட்டி:

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி பேசுகையில், கலைஞர் இருக்கும் பெரும்பாலான மேடைகளில் நான் இருப்பேன். இன்று எனக்கு நோன்பு நாள். அப்படியிருந்தும் வந்துவிட்டேன்.

இன்று அடிக்கல் நாட்டியிருப்பது கலைஞர் நகரம் மட்டுல்ல; கலைஞர்களின் நகரம். சினிமா கனவுகளுடன் எல்லோரும் சென்னைக்கு வருகிறார்கள். அவர்கள் எல்லோரும் பாரதிராஜா, பாலசந்தர் ஆகிவிடுவதில்லை. ரஜினி,கமல் ஆகிவிடுவதில்லை. அதற்காக எல்லோரும் சென்னையை விட்டு திரும்பி விடுவதில்லை. இங்கேதான் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டு, சினிமாவில் முயற்சித்துக்கொண்டிருப்பார்கள்.

நாம் எல்லோரும் வெற்றி பெற்றவர்களை மட்டுமே பேசிக்கொண்டிருப்போம். தோல்வி பெற்றவர்களை பார்க்கவே வெறுத்துவிடுவோம்.

சினிமா கனவுகளுடன் சொந்த வீடு இல்லாமல் சென்னையில் இன்றும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக முதல்வர் கலைஞர் கருணாநிதி இலவச வீடு கொத்திருக்கிறார். அதனால் அனைவரின் மனதிலும் கலைஞர் நிற்பார்.

பொதுவாக இந்த மாதிரி ஒரு திட்டத்தை நிறைவேற்ற வந்தால் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். அதையும், இதையும் கேட்டு இந்த திட்டத்தையே நிறுத்திடுவார்கள். ஆனால் கலைஞர் இப்படியொரு திட்டத்தை நினைத்ததுமாதிரி முடித்துவிட்டார். இதற்காக அவர் யாரையெல்லாம் எப்படியெல்லாம் சமாளித்தாரோ என்றார்.

தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளரும், மத்திய அமைச்சருமான தாசரி நாராயணராவ் பேசுகையில், சினிமா கலைஞர்களுக்கு மதிப்பில்லா காலம் இருந்தது. நடிகர்கள் என்றால் வாடகைக்கு வீடு கூட தரமாட்டார்கள். அப்படிப்பட்ட தொழிலில் உள்ள திரைக்கலைஞர் களுக்கு கேட்டதுமே வீடு கட்டி தரும் திட்டத்தை வழங்கியவர் முதல்வர் கலைஞர்தான்.

திரைக்கலைஞர்களுக்கு முதல்வர் அளித்த இந்த சிறப்பால் நாங்கள் எல்லோரும் பெருமிதம் கொள்கிறோம். திரைக்கலைஞர்களுக்கு வங்கிக் கடன் எளிதில் வழங்கப்படவும் முதலமைச்சர் உதவவேண்டும் என்றார்.

நன்றியுடன் இருப்போம்-ஏவிஎம் சரவணன்:

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் பேசுகையில், சென்னை தினம் கொண்டாடப்படும் இன்றைய தினம் கலைஞர் நகரம் கால்கோள் விழா நடைபெறுவது வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். முதல்வர் திரையுலகினருக்கு ஏற்கனவே இதுபோன்ற பல திட்டங்களை வழங்கியுள்ளார்கள்.

1976ம் ஆண்டு டைரக்டர்ஸ் காலனியை அமைத்து கொடுத்தவர் கருணாநிதிதான். இதுபோல ஸ்டுடியோ கலைஞர்களுக்கும், குடியிருப்பு அமைத்து தந்திருக்கிறார்.

சினிமா தொழிலுக்கு அதிகம் செய்துள்ள முதல்வருக்கு நாம் என்றென்றைக்கும் நன்றியோடு இருக்க வேண்டும். இந்த முயற்சியில் ஈடுபட்ட வி.சி.குகநாதன், ராம. நாராயணன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

0 comments:

Post a Comment