Saturday, August 21, 2010
Sathya Movies Prepares Badsha-2 (ரஜினியின் பாட்ஷா - 2... பரபரக்கும் சத்யா மூவீஸ் அலுவலகம்!)
எந்திரன் ரிலீஸுக்கு முன்பே, ரசிகர்களுக்கு அடுத்த இன்ப அதிர்ச்சியைத் தரத் தயாராகிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி .
நாம் முன்பே சொன்னது போல, சத்யா மூவீஸுக்கு அடுத்த படம் செய்கிறார். இப்போதைக்கு பாட்ஷா -2 என்று படத்துக்கு தலைப்பு வைத்திருந்தாலும், பாட்ஷாவுக்கும் இந்தப் புதிய படத்துக்கும் தொடர்பு ஒன்றுமில்லையாம்.
பாட்ஷாவுக்கு நிகரான அனல் பறக்கும் ஆக்ஷன் கதை என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சத்யா மூவீஸ் அலுவலகத்தில் தினசரி கதை விவாதம், டெக்னீஷியன்கள் தேர்வு என படு பரபரப்பாக உள்ளனர்.
விசாரித்தால் முன்பு மாதிரி அவசரமாக மறுக்காமல், 'படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத்தானே போகிறார்கள்... கொஞ்சம் பொறுங்கள்' என்கிறார்கள் தயாரிப்பாளர் ஆர் எம் வீரப்பனின் நெருங்கிய உறவினர்கள்.
சில மாதங்களுக்கு முன்பு ஆர்.எம்.வீரப்பன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட ரஜினி, 'என்னால் பலன் அடைந்தவர் பலர்; நஷ்டமடைந்த சிலரில் ஆர்.எம்.வீரப்பனும் ஒருவர். 'பாட்ஷா' போன்ற படத்தை ஆர்.எம்.வீரப்பன்தான் தயாரிக்க முடியும்...' என்று பேசினார்.
அதைத் தொடர்ந்துதான் இந்தப் புதிய பட வேலைகள் சுறுசுறுப்பாகியுள்ளன. எந்திரன் படத்தின் ஆடியோ ரிலீஸ், டப்பிங் வேலைகள் என பிஸியாக இருந்த ரஜினி ஆரம்பத்தில் பாட்ஷா-2 படத்துக்கான கதை விவாதத்தில் பங்கேற்கவில்லை.
இப்போது, எந்திரன் படத்தின் அனைத்தும் வேலைகளும் முடிவடைந்துவிட்டதால் ரஜினியும் கதை விவாத்தில் கலந்து கொண்டாராம்.
இயக்குநர் யார் என்பதை மட்டும் பொத்திப் பொத்தி வைக்கிறார்கள். ஹரிதான் இயக்குகிறார் என்று முன்பே செய்தி கசிந்தது. அப்போது அதை அவசரமாக மறுத்தார் ஹரி. ஆனால் ரஜினியின் சாய்ஸ் ஹரிதான் என்கிறார்கள். இதற்கு சத்யா மூவீஸும் சம்மதம் சொல்லியிருக்கிறது. இரு முறை சத்யா மூவீஸ் அலுவலகத்துக்கு ஹரி வந்ததையும் உறுதிப்படுத்துகிறார்கள்.
எந்திரன் படம் முடிந்ததும் ரசிகர்களைச் சந்திப்பதாக உறுதி கூறியிருந்தார் ரஜினி. மகள் சௌந்தர்யா திருமணம் , சுல்தான் க்ளைமாக்ஸ் பணிகள் மற்றும் இமயமலைப் பயணத்தை முடித்துக் கொண்டு ரசிகர்களைச் சந்திக்கும் ரஜினி, அவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் தனது முடிவை அறிவிப்பார் என்றும், அதே நேரம் புதிய படத்தையும் நடித்து முடிப்பார் என்றும் ராகவேந்திரா மண்டப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment